வார்னரை தூண்டிவிட்டது இவர்கள் தான்! வெளிப்படையாக கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச்
ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை தூண்டிவிட்ட விமர்சர்களுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், வார்னரை விமர்சித்தவர்களுக்கு நன்றி.
சில வாரங்களுக்கு முன் வார்னரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என பலர் எழுதியதை என்னால் நம்பமுடியவில்லை.
அந்த விமர்சனங்கள் தான் வார்னரை வெகுண்டெழ தூண்டியது.
சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரை போனில் தொடர்பு கொண்டு, வார்னரை பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறினேன்.
அவர் டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வெல்வார் எனவும் கூறினேன்.
வார்னர் ஒரு சிறந்து பேட்ஸ்மேன் மற்றும் அவர் ஒரு போராளி.
அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழும் போது தான், மிகவும் சிறந்த டேவிட் வார்னர் நமக்கு கிடைப்பார். அவருக்கு இது சிறப்பான தொடராக முடிவடைந்தது என பின்ச் குறிப்பிட்டார்.
2021 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் பிளேயிங் லெவனிலிருந்து டேவிட் வார்னர் புறக்கணிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வார்னர் மீதான விமர்சனங்கள் எழுந்தன என்பது நினைவுக்கூரத்தக்கது.