யுவராஜ் சிங் மீது வழக்குபதிவு! 8 மாதங்களுக்கு பின் விஸ்வரூபமெடுத்த சாஹல் விவகாரம் Yuzvendra Chahal
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது ஹரியானா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
2020 ஜூன் மாதம் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மாவுடனான நேரலை கலந்துரையாடலின் போது யுவராஜ் சிங், யுஸ்வேந்திர சாஹல் மீது சாதிய ரீதியான கருத்துக்கள் தெரிவித்தார்.
யுவராஜ் சிங்கின் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது, மேலும் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சாஹல் மீதான தனது கருத்திற்கு யுவராஜ் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதமே, இந்த விவகாரம் தொடர்பில் ஹன்ஸியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜத் கல்சன், ஹரியானா காவல்துறையிடம் யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார்.
தற்போது 8 மாதங்களுக்கு பின் வழக்கறிஞர் ரஜத் கல்சன் அளித்த புகாரின் அடிப்படையில் யுவராஜ் சிங் மீது ஹரியானா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஐபிசி மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் 153, 153 ஏ, 295, 505 பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கல்சன் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் கருத்து அந்த நேரலை வீடியோ பார்த்துக்கொண்டிருந்த மில்லியன் கணக்கான தலித்துகளின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என வழக்கறிஞர் கல்சன் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் 2019 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.