சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு
சுவிட்சர்லாந்தின் மதுபான கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் தீ விபத்தில் டஜன் கணக்கானோர் உயிரிழந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேளிக்கை விடுதியில் தீ விபத்து
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவில்(Crans-Montana) உள்ள லெ கான்ஸ்டலேஷன்( Le Constellation bar) பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட திடீர் தீ விபத்தில் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் இதில் சிறிய காயங்களோ அல்லது பலத்த காயங்களோ அடைந்துள்ளனர்.
இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு
உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இத்தாலியின் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவலில், தீ விபத்தில் குறைந்தது 40 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் இத்தாலிய நாட்டு குடிமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கிட்டத்தட்ட 16 பேர் வரை காணாமல் போய் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் 2 பேர் பிரான்ஸ் நாட்டவர்கள் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்ட அறிவிப்பில், சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சகோதரத்துவ ஆதரவையும் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.///
தீ விபத்துக்கான காரணம் என்ன?
பிரான்ஸ் செய்தி நிறுவனமான BFMTV தகவல்படி, பணிப்பெண் ஒருவர் ஷாம்பெயின் போத்தலின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார். இதையடுத்து ஷாம்பெயின் போத்தல் மேலே தூக்கி பிடிக்கப்பட்ட போது மேற் கூரையில் தீ பற்றிய நிலையில் சிறிது நேரத்தில் பாரின் மேல் கூரை முழுவதும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தாக்குதல் அல்ல, விபத்து சம்பவம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விபத்தை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக நாட்டின் சுகாதார துறை சம்பவ இடத்துக்கு 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பியுள்ளது.
Valais மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு முழு திறனை அடைந்து இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |