பிரான்சில் ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தீ
பிரான்சிலுள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் செவ்வாய்கிழமை மாலை திடீரென தீப்பற்றிய நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தீ
பிரான்சிலுள்ள Courchevel என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள Grandes Alpes என்னும் ஹொட்டலில் செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது.

புதன்கிழமை காலை வரை தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததாகவும், அந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புவீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஹொட்டலின் இணையதளம் தெரிவிக்கிறது.
அந்த ஹொட்டலில் தங்கியிருந்த 90 பேரும், அதற்கு அருகில் இருக்கும் Hotel Le Lana என்னும் ஹொட்டலில் தங்கியிருந்த 200 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஹொட்டல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். .

தீயணைக்கும் பணியில் 131 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், தீ அருகிலுள்ள மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் அவர்கள் தடுத்துவிட்டதாகவும், இந்த முயற்சியில் நான்கு தீயணைப்பு வீரர்கள் புகையால் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
எதனால் இந்த தீவிபத்து ஏற்பட்டது என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து 40 உயிர்களை பலிவாங்கியதன் பரபரப்பு அடங்காத நிலையில், பிரான்ஸ் ஹொட்டலில் தீப்பற்றிய விடயம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதில் வியப்பேதும் இல்லை எனலாம்.