தீபற்றி எரிந்த குடியிருப்பு... தாயாருடன் 5 பிள்ளைகள் மருத்துவமனையில்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ பிடித்து எரிந்ததில், தாயாரும் அவரது 5 பிள்ளைகளும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
பெர்ன் மண்டலத்தின் Pieterlen பகுதியிலேயே வெள்ளிக்கிழமை குறித்த குடியிருப்பு தீ விபத்தில் சிக்கியுள்ளது.
தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், அந்த குடியிருப்பானது மொத்தமும் தீக்கிரையாகியிருந்தது.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்று குழுவாக பிரிந்து, போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே, தீ விபத்தை அடுத்து அதில் குடியிருந்த பலர் உயிருக்கு பயந்து வெளியேறியுள்ள நிலையில், தாயார் ஒருவரும் அவரது 5 பிள்ளைகளும் தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். நெருப்பினால் ஏற்பட்ட வாயு தாக்கி அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பானது மொத்தமும் சேதமடைந்துள்ளதால், தற்போதைய சூழலில் அதில் குடியிருக்க முடியாது என்றே தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, நகராட்சியின் உதவியுடன், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இடைக்கால தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் தீவிபத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து தெளிவுபடுத்த பெர்ன் மண்டல பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.