ஜேர்மனியில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ: பிரச்சினையை அதிகரித்த புயல்
ஜேர்மன் நகரம் ஒன்றில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றிய நிலையில், புயல் காற்றால் தீ வேகமாகப் பரவியதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு, ஜேர்மன் நகரமான Essenஇல் அமைந்துள்ள அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில், உள்ளூர் நேரப்படி 2.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. தீ, தீ என ஒருவர் சத்தமிட, மக்கள் வீடுகளை விட்டு வேகமாக வெளியேறத்துவங்கியுள்ளனர்.
20 நிமிடங்களுக்குள் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியதாக சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், ஞாயிறு இரவு ஜேர்மனியின் சில பகுதிகளைத் தாக்கிய Antonia புயல் காரணமாக வீசிய காற்றால் தீ இன்னும் வேகமாக பரவியுள்ளது.
இந்த சம்பவத்தில், மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தக் கட்டிடத்தில் இருந்த 50 வீடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அதிகாலை வரை அவர்கள் தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தீப்பற்றியதற்கான காரணம் தெரியாத நிலையில் தீ கட்டுக்குள் வந்ததும் அது தொடர்பான விசாரணையைத் துவக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் முக்கியமான சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன.