பிரித்தானிய பகுதியொன்றில் 3வது நாளாக காட்டுத்தீ: மீண்டுவர 25 ஆண்டுகள் ஆகலாம்..நிபுணர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.
மூன்றாவது நாளாக காட்டுத்தீ
சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.

தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், ஹெலிகொப்டர்களில் இருந்து ஆயிரக்கணக்கான லிற்றர் கடல்நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
லெஸ்டனுக்கு அருகிலுள்ள டன்விச் ஹீத் பகுதியில், புதன்கிழமை மாலை முதல் தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன், எசெக்ஸ் மற்றும் மேற்கு யார்க்ஷயர் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் தீயணைப்புக் குழுவினர் உள்ளூர், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்துள்ளனர்.
25 ஆண்டுகள் ஆகலாம்
அதேபோல், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் டசின் கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர்.
அவர்களில் பலர், வயல்வெளித் தீ குறித்த தங்கள் அறிவைப் பகிர்ந்துகொண்டு, தண்ணீர் டேங்கர்களைக் கொண்டு செல்ல தங்கள் டிராக்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஏராளமான குடியிருப்பாளர்களும், நூற்றுக்கணக்கான விடுமுறைக்காலப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சஃபோக் (Suffolk) பகுதிக்கான RSPB மேலாளர் ஆடம் ரோவ்லேண்ட்ஸ் கூறுகையில், "ஆண்டின் இக்காலகட்டத்தில் இப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால், தீ விபத்திற்கான அபாயம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அந்த முதல் தீப்பொறி RSPB நிலப்பகுதியிலிருந்தே உருவானது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. டன்விச் ஹீத் பகுதியைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மீண்டும் பழைய நிலையை அடைய 25 ஆண்டுகள் ஆகலாம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |