விபத்தில் இறந்த பெண்களை மோசமாக புகைப்படம் எடுத்து அந்தரங்கத்தை விமர்சித்த தீயணைப்புத்துறையினர்: பொலிசாருக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவின் சில பகுதிகளில், தீயணைப்புத்துறையினர், விபத்தில் சிக்கிய பெண்களை மோசமாக புகைப்படம் எடுப்பதுடன், அவர்கள் விபத்தின்போது அணிந்திருந்த உள்ளாடைகள் போன்ற அந்தரங்க விடயங்களைக் குறித்துக்கூட விமர்சிக்கும் விடயங்கள் நடந்துவருவதாக பொலிசார் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
தீயணைப்புத்துறையிலிருந்தே வந்த எச்சரிக்கை
Dorset மற்றும் Wiltshire பகுதி தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கி இறந்த பெண்களின் உடல்களை மோசமான வகையில் புகைப்படம் எடுப்பதாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை, தீயணைப்புத்துறையில் பணியாற்றும் பெண் ஒருவரே வெளிக்கொணர்ந்துள்ளார்.
தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கிய பெண்களின் உடல்களை புகைப்படம் எடுத்துள்ளதுடன், அவற்றை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளார்கள். ஆண்கள், அந்த புகைப்படங்களை பகிர்வதுடன், விபத்தின்போது அந்தப் பெண்கள் அணிந்திருந்த உள்ளாடைகள் முதலான விடயங்கள் குறித்துக்கூட கமெண்ட் செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் இறந்த ஒருவரின் உடலை மீட்பதே கலங்கச் செய்யும் ஒரு விடயம். அப்படிப்பட்ட சூழலின்போது யாரையாவது புகைப்படம் எடுக்கத்தோன்றுமா என்று கேட்கும் அந்தப் பெண், அது வேறொருவரின் அன்புக்குப் பாத்திரமானவர், அதாவது அவர் உங்கள் உறவினர் இல்லை என்பதால் அவரை புகைப்படம் எடுத்துவைத்துக்கொண்டு, பிறகு அவரைக் குறித்து ஜோக்கடிப்பது நியாயமா, அவர் வேறொருவரின் உறவினர் இல்லையா என கேள்வி எழுப்புகிறார்.
துறை ரீதியான நடவடிக்கை
இந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த குற்றச்செயல்கள் குறித்து பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியான நடவடிக்கையும் துவக்கப்பட்டுள்ளதாகவும், Dorset and Wiltshire தீயணைப்புத்துறை தலைமை அதிகாரியான Ben Ansell தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோன்ற சூழல்களில் உடனடியாக புகாரளிப்பதற்காக இரகசிய தொலைபேசி எண் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.