உக்ரைனில் உயிரிழந்த முதல் பிரித்தானிய வீரர் - ரஷ்யா அரசியல் ஆதாயம் பெற முயற்சி
உக்ரைனில் தொடங்கிய ரஷ்யா முழுமையான போருக்குப் பிறகு, முதல் முறையாக பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை, உக்ரைன் இராணுவம் புதிய ஆயுதத்தை சோதனை செய்துகொண்டிருந்தபோது, நடந்த “துரதிர்ஷ்டவசமான விபத்தில்” அவர் உயிரிழந்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வீரர் சிறப்பு படையில் இருந்ததாக The Sun செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அவரது பதவி, பிரிவு ஆகியவை உறுதிப்படுத்தப்படவில்லை.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி இருவரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். “அவரது சேவையும் தியாகமும் என்றும் மறக்கப்படாது” என ஸ்டார்மர் கூறினார்.

பிரித்தானியா, உக்ரைனில் குறைந்த எண்ணிக்கையிலான படையினரை வைத்திருப்பதை முன்பே ஒப்புக்கொண்டுள்ளது.
அவர்கள் உக்ரைன் இராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதோடு, கீவ் தூதரகத்கிற்கு பாதுகாப்பு வழங்கியும் வருகின்றனர். மேலும் மருத்துவ பயிற்சிகளிலும் பங்கேற்கின்றனர்.
இதுவரை முன்னாள் பிரித்தானிய வீரர்கள் பலர் உக்ரைனுக்குச் சென்று போரில் உயிரிழந்திருந்தாலும், பணியில் இருக்கும் வீரர் உயிரிழப்பது இதுவே முதல் முறை.
இந்தச் சம்பவம், பிரிட்டிஷ் படையினர் உக்ரைனில் மேற்கொள்ளும் பணிகளை வெளிச்சமிட்டுள்ளது.
ரஷ்யா, இந்த மரணத்தை பயன்படுத்தி “நேட்டோ படைகள் நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளன” என்ற தவறான பிரசாரத்தை வலுப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |