AIDS நோயால் இறந்த முதல் பிரித்தானியர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு அடையாளத்தை வெளியிட்ட குடும்பம்
பிரித்தானியாவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைந்த முதல் நபர் தொடர்பில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினரும் நண்பர்களும் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை Patient Zero என மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுவந்த அவரது பெயர் John Eaddie என வெளிப்படுத்தியுள்ளனர். 1970களில் போர்ன்மவுத் பகுதியில் விருந்தினர் இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் John Eaddie.
செல்சியில் உள்ள ராயல் ப்ரோம்ப்டன் மருத்துவமனையில் 1981 அக்டோபர் 29ம் திகதி நிமோசைஸ்டிஸ் நிமோனியாவால் இறந்ததாக கூறப்பட்ட இவர், பின்னர் தீவிர ஆய்வுகளுக்கு முடிவில் John Eaddie எய்ட்ஸ் நோயால் மரணமடைந்துள்ளார் என்பதை மருத்துவர்கள் குழு உறுதி செய்தது.
எடியின் மரணம் நடந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் நோய் தொடர்பில், அதன் அடிப்படைக் காரணம் ஒரு வைரஸ் என்று பிரித்தானிய மருத்துவர்களுக்குத் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது, கடந்த 40 ஆண்டுகளில் பிரித்தானியாவில் மட்டும் எய்ட்ஸ் நோய்க்கு 15,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர். John Eaddie தன்பால் ஈர்ப்பாளர் எனவும், அமெரிக்காவின் மியாமி நகருக்கு சென்று திரும்பிய நிலையிலேயே, அங்குள்ள தன்பால் ஈர்ப்பாளர்களிடையே பரவலாக காணப்பட்ட தொற்று இவருக்கும் காணப்பட்டதாக 1981ல் வெளியான மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
John Eaddie மரணமடைந்த சில மாதங்களில் லண்டனில் உள்ள தன்பால் ஈர்ப்பாளர்கள் 400 பேர்களிடம் மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டதில், அவர்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அதில் 399 பேர்கள் அந்த நோய் காரணமாக காலப்போக்கில் மரணமடைந்துள்ளதும் ஆய்வாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
John Eaddie எய்ட்ஸ் நோயால் மரணமடைந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டாலும், 1982ல் இறந்த Terrence Higgins என்ற பிரித்தானியரே, மருத்துவர்களால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட முதல் எய்ட்ஸ் நோயாளி என கூறப்படுகிறது.