உலகிலேயே தண்ணீரில் கழுவினாலும் பாதிக்கப்படாத முதல் பேட்டரியை கண்டுபிடித்துள்ள நாடு
உலகிலேயே தண்ணீரில் கழுவினாலும் பாதிக்கப்படாத, மற்றும் வளையும் தன்மை கொண்ட முதல் பேட்டரியை கனேடிய ஆய்வாளர்கள் சிலர் வடிவமைத்துள்ளார்கள்.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள்.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள். இந்த பேட்டரியால், உடலில் அணிந்துகொள்ளக்கூடிய கருவிகள் என்ற விடயம் கிட்டத்தட்ட சாத்தியமாகியுள்ளது என்றும், துணி துவைக்கும்போது மறதியாக ஆடையிலேயே விட்டுவிட்டாலும்கூட இந்த பேட்டரி நீடித்து உழைக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பேட்டரியை இரண்டாக மடித்தாலோ, அல்லது அதன் அளவைவிட இரண்டு மடங்கு இழுத்தாலோ கூட, அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதாம்.
உண்மையில், உடலில் அணிந்துகொள்ளத்தக்க பேட்டரிகள் ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கின்றன. ஆனால், அவை தண்ணிரில் கழுவப்படத்தக்கவை அல்ல! ஆகவே, இந்த முக்கியமான கண்டுபிடிப்பு, அன்றாட பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்கிறார்கள் அதைக் கண்டுபிடித்தவர்கள்.
இந்த பேட்டரியை சோதனை முறையில் 39 முறை துவைக்கும் இயந்திரத்தில் போட்டும் அத்ற்கு ஒன்றும் ஆகவில்லையாம்.
இருந்தாலும், உடலில் அணியும் வகையிலான கருவிகளுடன் இனிதான் இந்த பேட்டரியை இணைத்து பரிசோதிக்க இருக்கிறார்கள். அதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம்.
மேலும், இந்த பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும் என்பதை ஆராய்ந்து, அதை இன்னமும் அதிக ஆற்றல் மிக்கதாக ஆக்க இருக்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
அத்துடன், கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த பேட்டரியின் விலையும் குறைவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த பேட்டரி, கைக்கடிகாரங்கள், மற்றும் இதயத்துடிப்பை அறிவதற்காக இதயத்தின் அருகில் பயன்படுத்தப்படும் கருவிகள் முதலான கருவிகளில் பயன்படுத்தப்படலாம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்!