இனி காரில் பறக்கலாமா! பறக்கும் காரை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய பறக்கும் காரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அனுமதி வழங்கியுள்ளது.
பறக்கும் கார் உருவானது எப்படி?
திரைப்படங்களில் மட்டுமே வானத்தில் கார் பறப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜத்திலும் இனி நாம் காரில் பறக்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பறக்கும் காரை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) காரை பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதியும் வழங்கியுள்ளது.
'மாடல் ஏ' என அழைக்கப்படும் இந்த கார், சிறப்பு விமான தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மின்சாரத்தை வைத்து மட்டும் தான் இந்த காரை இயக்க முடியும்.
இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,"ஃபெட்ரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), “எலெக்ட்ரிக்கல் வெர்டிகள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL)” என்னும் வாகனங்களுக்கான கொள்கைகளில் தீவிரம் காட்டுவதோடு, eVTOL மற்றும் தரை உள்கட்டமைப்பு இரண்டிற்கும் இடையேயான தொடர்புகளையும் கவனத்துடன் நிர்வகிக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
பயன்பாட்டிற்கு வரும் பறக்கும் கார்
முன்னொரு காலத்தில் விமானம் போகும் போது மேலே பார்ப்பது உண்டு. இனி நாம் அந்த மாதிரி, கார் பறக்கும் போது பார்க்க வேண்டும் என்பது வியப்பாக தான் இருக்கிறது.
எஞ்சின்களை வைத்து பறக்கும் காரை உருவாக்க முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் மின்சாரத்தை வைத்து பறக்கும் காரை உருவாக்கியுள்ளது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம். அதுமட்டுமில்லாமல், பறக்கும் வாகனத்திற்கு சான்றிதழ் கிடைத்தது இது தான் முதல் முறை.
இந்த காருக்கு என்ன ஸ்பெஷல்
அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் கார், சாதாரண காரை போல ஓட்டும் திறனை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வெர்டிகள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் திறனையும், மலிவு ஆகிய முக்கிய தேவைகளையும் வாடிக்கையாளருக்கு பூர்த்தி செய்கிறது.
மேலும் இந்த கார் 200 மைல்கள் ஓட்டும் திறன் மற்றும் 110 மைல்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. கலிபோர்னியாவின் சான் மேடியோவில் அமைந்துள்ள இந்த பறக்கும் காரின் விலை $ 300,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
100% மின்சாரத்தில் மூலம் இயங்கும் இந்த பறக்கும் கார் ஒன்று அல்லது இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும்.
கார் உற்பத்தி எப்போது தொடங்கும்?
'மாடல் ஏ' காரின் உற்பத்தியானது 2025-ம் ஆண்டின் 4வது காலாண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், 4 நபர்கள் பயணிக்கும் காரையும் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த காரின் பெயர் மாடல் Z என வைக்கப்பட்டுள்ளது.
இந்த காரானது 2035 ஆம் ஆண்டில் $35,000 ஆரம்ப விலையில் அறிமுகமாகும் எனவும், 300 மைல்களுக்கு மேல் பறக்கும் திறனையும், 200 மைல்களுக்கு மேல் ஓட்டும் திறனையும் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |