ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை
ஜேர்மனியும் பிரித்தானியாவும் பாதுகாப்பு முதலான பல்வேறு அம்சங்கள் கொண்ட பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட அடுத்த சில மணி நேரங்களில் ரஷ்ய தரப்பிலிருந்து எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதன்முறையாக ஜேர்மனியும் பிரித்தானியாவும் பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இரு நாடுகளில் ஒன்று ஏதாவது ஒரு எதிரியால் தாக்கப்படும் நிலையில், மற்ற நாடு உதவிக்கு வருவதை அந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பிலும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும் பேசிக்கொண்டார்கள்.
ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த சில மணி நேரங்களுக்குள் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான மரியா (Maria Zakharova) எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் வழங்கப்படுமானால், மேற்கு ஐரோப்பாவை தாக்கவேண்டிய கட்டாய நிலை ரஷ்யாவுக்கு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
மோதல் போக்கு அதிகரிக்கும் நிலையில், பழிக்குப் பழி வாங்கும் வகையில் நாங்களும் பதிலடி கொடுப்போம் என்றும், தங்கள் ஆயுதங்களை எங்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவங்களுக்கு எதிராக தனது ஆயுதங்களை பயன்படுத்துவது சரியானதே என ரஷ்யா கருதுகிறது என்றும் மரியா கூறியதாக Tass என்னும் ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |