புதிய எபோலா தடுப்பூசி: சோதனைக்கு முன்வந்த உலகின் முதல் மனிதர்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில், 37 வயதான எட் ஹன்ட் (Ed Hunt) என்ற இளைஞர், புதிய எபோலா தடுப்பூசி சோதனைக்கு உலகில் முதல் நபராக முன்வந்துள்ளார்.
காங்கோவில் ஏற்பட்ட எபோலா பரவல் குறித்து செய்திகளை பார்த்தபின், மனிதர்களுக்காக தன்னால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இந்த முயற்சியில் கலந்து கொண்டார்.

இந்த தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசி உருவாக்கத்தில் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, வெறும் எட்டு வாரங்களில் உருவாக்கப்பட்டது.
தற்போது 18 முதல் 55 வயதுக்குள் உள்ள 50 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் இந்த சோதனையில் பங்கேற்க உள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரசா லாம்ப் தலைமையிலான குழு, இந்த தடுப்பூசி புந்திபுக்யோ வகை எபோலா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்குமா என்பதை ஆராய்கிறது. இந்த சோதனையில் யாருக்கும் எபோலா வைரஸ் கொடுக்கப்படாது. பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது.
இப்போது வரை, புந்திபுக்யோ வகை எபோலாவுக்கு எதிராக நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், மனிதர்கள் மீது சோதனைக்கு வந்திருப்பது இதுவே முதலாவது. இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏற்கனவே 6 லட்சம் டோஸ்களை தயாரித்து வைத்துள்ளது.
காங்கோவில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த புதிய தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால், உலகளவில் எபோலா பரவலை கட்டுப்படுத்துவதில் பெரும் முன்னேற்றமாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |