முதல்முறையாக மருத்துவமனையில் ஓமிக்ரான் நோயாளிகள்... லண்டனில் மூன்றில் ஒருவருக்கு பாதிப்பு
ஓமிக்ரான் கொரோனா தொற்றாளர்கள் சிலர் மருத்துவமனையை நாடியுள்ளதாகவும், லண்டனில் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றில் ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கல்விச் செயலர் நாதிம் ஜஹாவி உறுதிப்படுத்தியுள்ளதுடன், பிரித்தானிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஓமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையை நாடக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கொரோனா மாறுபாடு கைவிட்டுப்போகக் கூடும் என எச்சரித்துள்ள ஜஹாவி, இந்த மாத இறுதிக்குள் ஓமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டும் ஆபத்து உருவாகியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
லண்டனில் உறுதி செய்யப்படும் கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒருபங்கு ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ள அவர், பிரித்தானியா மற்றும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஓமிக்ரன் மிக விரைவில் உருமாறக்கூடும் என்றார்.
ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதில் தீவிர சிகிச்சைக்கு 10,000 பேர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றால், மூன்று நாட்களுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 2 மில்லியன் எனவும் 3 நாட்களில் இது நான்கு மில்லியன் எனவும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் ஜஹாவி.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடைவிட ஆபத்தில்லாத, லேசான அறிகுறிகளுடன் இருந்தாலும் எண்ணிக்கை அளவில் இது மிகவும் அபாயமானது என்கிறார் ஜஹாவி.