ஒன்றரை வயதில் மகளைப் பிரிந்து கனடா சென்ற தாய்... 12 ஆண்டுகளாக வாடும் துயரம்
மகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதற்காக அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போது அவளைப் பிரிந்து வெளிநாடு சென்றார் ஒரு இந்தியப் பெண். அவரது பெயர் ரோஷிணி கிறிஸ்டியன்... தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையை தன் தந்தையின் கையில் கொடுத்துவிட்டு, கணவனுடன் பிரித்தானியாவுக்கு சென்றார் ரோஷிணி.
ஒரு பக்கம் பிரித்தானியாவுக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை மகளின் பிரிவு மறக்கச் செய்ய, கனத்த மனதுடன் மகளைப் பிரிந்து சென்றார் ரோஷிணி. விமானம் புறப்பட, பிரித்தானியாவுக்கு செல்கிறோம் என்ற எண்ணம் மறைந்து, ஒன்றரை வயது குழந்தையை பிரிந்து செல்கிறோம் என்ற குற்ற உணர்வே மேலோங்கியிருக்கிறது ரோஷிணிக்கு. பிரித்தானிய வாழ்க்கையோ எதிர்பார்த்தது போல இல்லை.
கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு திருமணமே முறிந்து போக, விவாகரத்தான ஒற்றை பெற்றோராக, மகளின் முகத்தை மட்டுமே கண் முன் நிறுத்தி வாழ்ந்த ரோஷிணி மீண்டும் அவளை சந்திக்கும்போது அவளுக்கு ஆறு வயது.
அடுத்து கனடாவுக்கு செல்வதென முடிவு செய்திருக்கிறார் ரோஷிணி. மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்து, படித்து, வேலைக்கு சேர்ந்தாலும், மனதில் ஒரே ஆசைதான். அது, எப்படியாவது மீண்டும் மகளுடன் இணைந்துவிடுவதே... ஆனால், ரோஷிணியின் நிரந்தர வாழிட உரிமத்துக்கான விண்ணப்பம் நகரவே இல்லை.
கொரோனாவோ, கூடுதல் தாமதத்தை ஏற்படுத்த, இன்னமும் மகளுடன் இணைய முடியாமல் வாடிப்போயிருக்கிறார் அவர்.
இப்போது அவரது மகள் ட்விஷாவுக்கு 12 வயதாகிறது. ஆனாலும், இன்னமும் அவர் கண்ட கனவு, மகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவு பலிக்கவில்லை. மகளின் முகத்தையும் புன்னகையையும் நினைத்துக்கொண்டே, மகளுடன் சேரும் நாளுக்காக காத்திருக்கிறார் ரோஷிணி...