க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முன்னெடுப்பு
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 1 ஆம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு முதல் தடைவையாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய இன்று பல சுகாதார பிரிவுகளில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசகள் வழங்கும் வேலைத்திட்டம் கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி கே.சுதர்சன் (K.Sudarshan) தலைமையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பைசர் தடுப்பூசிகளை இன்று (22) காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12 வரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.
இதில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ், யதன்சைட் , திம்புல்ல ஸ்டோனிகிளிப் ஆகிய ஐந்து பாடசாலைகள் 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களில் கல்வி பயிலும் 900 மாணவர்களுக்கும், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் வித்தியாயலம், சுமன சிங்கள மகா வித்தியாலயம், வட்டகொட தமிழ் மகா வித்தியாலயம், கிரேட்வெஸ்ட்டன் ,பாரதி தமிழ் வித்தியாலயங்களில் கல்வி பயிலும் சுமார் 700 மாணவர்களுக்கும் இன்று தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகள் வழங்கும் போது மாணவர்களுக்கு ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதனை கண்காணிப்பதற்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததுடன் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு தடுப்பூசி பெற்றுக்கொள்வதனை காணக்கூடியதாக இருந்தன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் பயிலும் உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (22) மேற்படி பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது 174 மாணவர்களுக்கு இதன் போது தடுப்பூசி ஏற்றப்படுவதாக களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன் (K. Satyamohan) தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட்ட பொதுச்சுகாதர பரிசோதகர் யோகேஸ்வரன் (Yogeshwaran) , மற்றும் ஏனைய பொதுசுகாதர பரிசோதகர்கள், உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றினர்.
ஓட்டமாவடி
மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த பரீட்சை ஏழுதும் மாணவர்களுக்கான முதலாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள உயர்தர கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் (M.H.M.Tharik) தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலை, ஓட்டமாவடி தேசிய பாடசாலை, காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் ஆகியவற்றில் மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி இன்று ஏற்றப்பட்டது.
மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள உயர்தர கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரி.எஸ்.சஞ்ஜீவ் (R.S.Sanjeev) தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை, பேத்தாழை விபுலானந்த வித்தியாலய தேசிய பாடசாலை, கல்குடா நாமகள் வித்தியாலயம் ஆகியவற்றில் க.பொ.த உயர்தர பரீட்சை ஏழுதும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி இன்று வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
கொட்டகலை
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1,676 மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 11 பாடசாலைகளைச் சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு கொட்டகலை மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலைகளில் வைத்து இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 10 மணிவரை தடுப்பூசி ஏற்றப்பட்டது.
மூதூர்
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், அந்நஹார் பெண்கள் கல்லூரி போன்றவற்றின் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்கு இன்று (22) முதன்முறையாக பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதில் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமக்கான முதலாவது பைஸர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.
குறித்த இரண்டு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அமைக்கப்பட்ட விசேட இடங்களில் வைத்தியர்களினால் மாணவர்களின் வெப்பநிலை, குருதி அலுத்தம் என்பன பரிசோதிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் தடுப்பூசி ஏற்ற அனுமதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதார பிரிவினர் என பலரும் பிரசன்னமாகி நிலமைகளை பார்த்தறிந்து கொண்டனர்.