அஸ்வின் சுழலில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்... 150 ஓட்டங்களுக்கு சுருண்டது
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 150 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
வின்ட்சர் பார்க் மைதானத்தில்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் முன்னெடுக்கப்படுகிறது.
@bcci
முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
நாணய சுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி துடுப்பாட்டம் தெரிவு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ஓட்டங்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அஸ்வின் 5 விக்கெட்
பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரேமன் ரைபர் 2 ஓட்டங்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ஓட்டங்கள், ஜோசுவா டா சில்வா 2 ஓட்டங்கள், ஜேசன் ஹோல்டர்18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அனியில் சிறப்பாக விளையாடிய அலிக் அதானாஸ் 47 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், ஷார்துல் தாகூர், சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |