பிரித்தானியாவைத் தொடர்ந்து பிரான்ஸ் இரவு விடுதிகளில் அதிகரிக்கத் துவங்கியுள்ள ஒரு குற்றச்செயல்
ஜனவரியில் பிரித்தானிய பொலிசார் ஒரு குறிப்பிட்ட குற்றச்செயல் அதிகரித்து வருவதை உறுதி செய்தார்கள்.
அது என்னவென்றால், இரவு விடுதிகளுக்குச் செல்வோர் திடீரென ஊசியால் குத்தப்படுவதாகும். அதாவது, இரவு விடுதியில் நடனமாடிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது திடீரென போதைப்பொருள் ஒன்றை ஊசி மூலம் குத்தி விடுவார்கள்.
அந்தப் பெண்கள் நிலை தடுமாறி நிற்கும்போது, அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் உண்டு.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, 1,300 ஊசி குத்துதல் புகார்கள் வந்துள்ளன. அத்துடன், கூடவே, அப்படி ஊசியால் குத்தப்பட்ட பெண்கள் பாலியல் தாக்குதல் அல்லது திருட்டு போன்ற பாதிப்புகளுக்கு ஆளானதாகவும் 14 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
தற்போது, இந்த பிரச்சினை பிரான்ஸ் நாட்டிலுள்ள இரவு விடுதிகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளதாக கருதப்படுகிறது. இந்த பிரச்சினை பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் வரை எட்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதத்தினர் இளம்பெண்கள் என்பதை உள்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.
இதுவரை 130 ஊசி குத்தும் புகார்கள் வந்துள்ளதாக பிரெஞ்சு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஊசிகள் மூலம் பொதுவாக போதை உண்டாக்கும் ரசாயனங்கள் உடலில் செலுத்தப்படுவதுண்டு. பிரச்சினை என்னவென்றால், பிரான்சில் புகாரளித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது அந்த போதை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆக, அவர்கள் உண்மையாகவே குத்தப்பட்டார்களா, அல்லது இப்படி ஒரு விடயம் அதிகமாக பரவிவருவதால் அதைக் குறித்த அச்சத்தில் தாங்கள் குத்தப்பட்டதாக தவறாக புரிந்துகொண்டார்களா என ஒரு குழப்பம் உருவாகியுள்ளது.
ஆகவே, அப்படி யாராவது இரவு விடுதிகளில் தாங்கள் ஊசியால் குத்தப்பட்டது தெரியவந்தால், உடனடியாக பொலிசாரிடம் புகாரளிக்க வருமாறு பிரெஞ்சு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அப்படி புகாரளிக்க வருவது, அவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்களுடைய உடலில் என்ன ரசாயனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும், குற்றவாளியை விரைவாக பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.