தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம்
இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக அந்நாட்டு மீன் வளத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால், வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 125 விசைப் படகுகள், 17 நாட்டுப் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டு, காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த படகுகள் 5 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இருப்பதால், உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, விபத்துகள் ஏற்படுவதாக கூறி, படகுகளை ஏலம் விட அனுமதி கோரி, இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள், யாழ்பாணம் மாவட்ட ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி, மீட்கப்படாமல் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக ஏலம் விட உத்தரவிட்டார்.
கொரோனா பரவல் மற்றும் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடும் பணி நடைபெற உள்ளது.
இலங்கை ரூபாய் 50 ஆயிரம் வெலுத்தி முன்பதிவு செய்து, ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள், 17நாட்டு படகுகளுக்கு என மொத்தம் ரூ. 5.66 கோடி இழப்பீடு வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.