தமிழக மீனவர் விவகாரம்.., சீமான் பேச்சுக்கு ஆவேசமான சரத்குமார்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து சமீபத்தில் சீமான் பேசிய நிலையில், நடிகர் சரத்குமார் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து அவர்களுக்கு மொட்டை அடித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமானும் பேசியிருந்தார்.
சரத்குமார் ஆவேசம்
இந்நிலையில் நடிகர் சரத்குமார், சீமானுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த அறிக்கையில், "இந்தியா ஒரே நாடு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அர்த்தமற்று பிரிவினையை உருவாக்கும் விதமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் கூறிய பல குற்றச்சாட்டுகளில் ஒன்றை தற்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன். உதாரணத்திற்கு, தமிழக மீனவர்களை ஏன் இந்திய மீனவர்கள் என மத்திய அரசு அழைக்கவில்லை என்று அவர் கேட்கிறார்.
இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என பொதுவாகச் சொன்னால் மும்பையா? மேற்கு வங்கமா? குஜராத்தா? வங்காள விரிகுடாவா? இந்திய வரைபடத்தில் தெற்கிலா? கிழக்கிலா? மேற்கிலா? என எந்த பகுதியில் சம்பவம் நடந்தது என மக்கள் அறிய இயலாது. தமிழக மீனவர்கள் என்று சொன்னால் தான், நமது மீனவர்கள் இன்னலில் இருக்கிறார்கள் என்று தமிழக மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
இந்தியா என்ற ஒருங்கிணைந்த மாநில கூட்டமைப்புக்குள், தமிழ்நாடு ஏற்கெனவே ஓர் அங்கமாக திகழும் போது, இந்தியாவில் இருக்கின்ற தமிழக மீனவர்கள் என்றா செய்தி போடுவார்கள்? தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு முன்வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
ஆனால், இலங்கை அரசுக்கு உதவி செய்து இந்தியா எப்போதும் ஒரு நட்பு நாடாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் மீட்க இந்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருவதை சீமான் தெரிந்து கொள்ளவில்லை என்பது வேடிக்கையானது இந்தியா ஒரு நாடு இல்லை என்று அவர் பேசியிருப்பதில் இருந்து, அவரது தேசப்பற்று கேள்விக்குறியாகிறது.
அவரது இந்த பேச்சு, பிரிவினைவாதத்தை தூண்டுவதாக உள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத அவர், இந்திய அரசியலமைப்பின் கீழ் எப்படி அரசியல் கட்சி நடத்துகிறார் என புரியவில்லை.
தமிழ்நாடு மாநிலத்தின் மீது இந்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என அவருக்கு தோன்றினால், அவரது குறைகளை, குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கலாமே தவிர, ஒரு அரசியல் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி கொண்டு, இந்தியா ஒரு நாடே இல்லை என்ற பிரிவினைவாதத்தை விதைப்பது மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என்பது அவருக்கு தெரியாதா?
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர், இந்திய அரசின் முழு மேற்பார்வையில் சிறப்பாக செயல்படுவதும் அவருக்கு தெரியாதா? தாய் தமிழ்நாட்டின் மீது கொண்ட பற்று போல, அந்நியரிடம் இருந்து மீட்கப்பட்டு, இன்று பொருளாதாரத்தில் உலகில் சிறந்து விளங்கும் நமது தேசத்தின் மீதும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேசப்பற்று கொண்டு, ஜனநாயக கடமையை உணர்ந்து, பொறுப்புடன் செயல்படும் போது தான் உண்மையான இந்தியன் என்ற உணர்வோடு நம் நாடு அனைத்து துறையிலும் முன்னேறும்.
யாராக இருந்தாலும் கருத்துரிமை என்ற பெயரில், தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேச்சிலோ, செயலிலோ ஈடுபடக்கூடாது என தெரிவித்துக் கொள்கிறேன். நாம் தாய் மண்ணை மறவாமல் இந்தியர் என்று சொல்வதில் பெருமை கொள்வோம்!" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |