கனேடிய நிரந்தர வாழிட உரிமத்திலிருந்து கனேடிய குடியுரிமைக்கு மாறுவதால் கிடைக்கும் ஐந்து நன்மைகள்
கனேடிய நிரந்தர வாழிட உரிமத்திலிருந்து கனேடிய குடியுரிமைக்கு மாறுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
பாதுகாப்பு மற்றும் கௌரவம் மட்டுமின்றி, நிரந்தர வாழிட உரிமம் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்காத வேறு சில நன்மைகள் கனேடிய குடியுரிமை வைத்திருப்போருக்கு கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்த நன்மைகள் என்னென்ன என்று இந்தக் கட்டுரையில் காணலாம்...
1. உங்கள் நிலையை (status) புதுப்பிக்க வேண்டியதில்லை
பெரும்பாலான நிரந்தர வாழிட அட்டைகள் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கவை. அந்த நேரத்தில் நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி நிலையை அடைய முடியும். நிரந்தர வாழிட உரிமம் வைத்திருப்போர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால், அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,095 நாட்கள் கனடாவில் தங்கியிருந்திருக்கவேண்டும்.
நீங்கள் குடிமகன் அல்லது குடிமகளாகிவிடும் பட்சத்தில், உங்கள் குடியுரிமை நிலையை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடியுரிமைச் சான்றிதழ்கள் நிரந்தரமாக செல்லத்தக்கவை.
2. கூடுதல் வேலை வாய்ப்புகள்
கனேடிய நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியாத சில வேலை வாய்ப்புகளுக்குக் கூட கனேடிய குடிமக்கள் விண்ணப்பிக்க முடியும். சில அரசுப் பணிகள் மற்றும் சில முக்கியமான பணிகளுக்கு கனேடிய மக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
3. உங்கள் நிலையை இழப்பதிலிருந்து மேம்பட்ட பாதுகாப்பு (Better protection against losing status)
நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் கூட நாடுகடத்தப்பட முடியும், அவர்கள் எவ்வளவு காலம் கனடாவில் வாழ்ந்திருந்தாலும் சரி!
ஆனால், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே கனேடிய குடியுரிமை ரத்து செய்யப்படும். கனேடிய சட்டப்படி, ஒருவர் பொய்யான தகவல்கள் அளித்தோ, மோசடி செய்தோ, உண்மைகளை மறைத்தோ குடியுரிமை பெற்றிருந்தால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்படலாம். அதுபோக, நாட்டின் பாதுகாப்பு, மனித மற்றும் சர்வதேச உரிமைகள் மீறல் அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய விடயங்களுக்காக ஒருவரது கனேடிய குடியுரிமை ரத்து செய்யப்படலாம்.
4. வாக்களிக்கும் உரிமை
கனேடிய குடிமக்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம். அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியும்.
5. கனேடிய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
கனேடிய குடிமக்கள் கனேடிய பாஸ்போர்ட் பெறமுடியும். பல நாடுகள், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக பயணிக்கும்போது, விசா இல்லாமலே கனேடிய குடிமக்களை தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா இரட்டைக் குடியுரிமையையும் அனுமதிக்கிறது என்பதால், உங்கள் சொந்த நாடும் இரட்டைக் குடியுரிமையை அனுமதித்தால், நீங்கள் இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்களுக்கு சொந்தக்காரராக முடியும்.
முடிவுரை
கனேடிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களில் சுமார் 86 சதவிகிதத்தினர் கனேடிய குடிமக்களாக ஆகிறார்கள். இது மேற்கத்திய நாடுகளிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
கனேடிய நிரந்தர வாழிட உரிமம் வைத்திருப்போர் கனேடிய குடிமக்களாக மாறும் போது, அது அவர்களுக்கும், கனடாவுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் ஒரு விடயமாகிறது. அது புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கிறது, அரசியலில் தங்கள் பங்கை ஆற்ற உதவுகிறது, அத்துடன், அது புலம்பெயர்ந்தோரின் பொருளாதார மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.