ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தல்... சுவிஸ் நிபுணர்கள் விடுக்கும் கடும் எச்சரிக்கை
கொரோனா தொடர்பில் தனிமைப்படுத்தல் நாட்களை ஐந்தாக குறைத்துள்ளது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சுவிஸ் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு வரும் பயணிகள் இனி ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தால் போதும். குறித்த அறிவிப்பை பெடரல் கவுன்சில் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பானது வியாழக்கிழமை முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கவே குறித்த மாறுதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கொரோனா தனிமைப்படுத்தல் காரணமாக நாட்டில் பெரும்பாலான நிறுவனங்களில் மக்கள் பணிக்கு திரும்பாததால் கடும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,
48 மணிநேரத்திற்கு எந்த அறிகுறியும் தென்படாதவர்கள் இப்போது தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறலாம் எனவும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவு தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் கவுன்சிலின் இந்த முடிவு சுவிஸ் நிபுணர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பணிக்கு திரும்புவது என்பது ஆபத்து மிகுந்தது என்கிறார் பல்கலைக்கழக மருத்துவமனை சூரிச் மருத்துவர் ஒருவர்.
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஐந்து நாட்களுக்கு பிறகு எந்த அறிகுறியும் இல்லை என்பதால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டால் அவர் 30% வரையில் நோயை பரப்ப போதுமானவர் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னரும் ஒருவர் 5% அளவுக்கு கொரோனா தொற்றை பரப்ப போதுமானவர் என்றே அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறுபவர்களில் மூன்றில் ஒருவர் அடுத்தவர்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்துகிறார் என்றே சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.