உடல் உறைந்து பலியான ஐவர்... 2300 விமானங்கள் ரத்து: கடும் பனிப்புயலில் சிக்கிய நாடொன்று
அமெரிக்காவை மொத்தமாக சூழ்ந்துள்ள பனிப் புயலில் சிக்கி குறைந்தது ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான மாகாணங்கள்
பனிப்புயல் காரணமாக பாடசாலைகள் பல மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மின்வெட்டு, விமான போக்குவரத்து முடக்கம், சாலைகள் மூடல் என அமெரிககாவின் பெரும்பாலான மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளது.
இதுவரை மேரிலாந்து, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய ஏழு மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, புயலின் அபாயம் மிகுந்த பாதையில் உள்ள மாகாணங்களில் திங்கள்கிழமை இரவு 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவித்துள்ளனர்.
தேசிய வானிலை சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, செவ்வாய்க்கிழமையும் வடகிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் பனி மற்றும் பனிப்பொழிவு தொடரும் என்று தெரிய வந்துள்ளது.
அதே வேளை, குளிர்ந்த ஆர்க்டிக் காற்று இன்னும் பல வாரங்களுக்கு நாட்டின் ஒரு பகுதி முழுவதும் பனிப்பொழிவுக்கு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை வாஷிங்டன் டிசியில் வானிலை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக மேரிலாந்தில் இருந்து கன்சாஸ் வரையிலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவர் இறந்து கிடந்ததாக
பனிப்பொழிவால், மிசோரியில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 365 பேர் விபத்துக்குள்ளானதாக மாகாண பிரதானசாலை ரோந்து அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதில் டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கன்சாஸ் மாகாணத்தில் புயலின் போது இருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெக்சாஸின் ஹூஸ்டனில், திங்கள்கிழமை காலை பேருந்து நிறுத்தத்தம் ஒன்றில் கடும் குளிர் காரணமாக ஒருவர் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வர்ஜீனியா மாகாணத்தில், நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை 300 கார் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, மாகாணத்தின் பெரும் பகுதிகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறு உள்ளூர்வாசிகளை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |