சுவிட்சர்லாந்தில் துயரத்தில் முடிந்த தெருச்சண்டை: அடையாளம் காணப்பட்ட ஐவர்
சுவிட்சர்லாந்தில் 7 பேர் கும்பல் ஒன்று தெருவில் மோதிக்கொள்ள, 20 வயது நபர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் காலென் மாநிலத்தில் Bahnhofstrasse பகுதியில் செப்டம்பர் 19ம் திகதி நடந்த சண்டையில் 20 வயது நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார்.
இந்த விவகாரத்தில் தற்போது செயின்ட் காலென் மாநில பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். இந்த சண்டையில் ஈடுபட்டதாக கூறும் 7 பேர்களில் தற்போது ஐவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களை கைது செய்து விசாரணையும் முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக பொலிசாரின் துரித நடவடிக்கையின் பலனாக 25 மற்றும் 26 வயதுடைய சுவிஸ் இளைஞர்கள் இருவர், 24 மற்றும் 29 வயதுடைய இருவர் உட்பட கொசோவோ நாட்டவர் மூவர் என ஐவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களை கைதும் செய்துள்ளனர்.
இவர்களுடன் கொல்லப்பட்ட 20 வயது சுவிஸ் நபர் மற்றும் தலைமறைவாக உள்ள 22 வயது ஜேர்மானியரையும் பொலிசாருக்கு ஏற்கனவே தெரியும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் 24 வயது கொசோவோ இளைஞர் மட்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியவர்களை நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையான விசாரணையில் ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவில்லை எனவும், இவர்கள் சண்டையில் ஈடுபட காரணம் என்ன என்பது தொடர்பில் முழுமையான தகவல் வெளியாகவில்லை என்றே தெரிய வந்துள்ளது.