நேபாளம் - திபெத்தை அடுத்து... கிராண்ட் கேன்யனைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம்
US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்கள்
பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பெரிய பாறைகள், உலோகக் கட்டமைப்புகள் மற்றும் பிற குப்பைகளை அதன் வழியாகப் பாயும் கொலராடோ ஆற்றில் அடித்துச் சென்றதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றவும், அங்குள்ளவர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும் அரிசோனா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது;

அத்துடன், காணாமல் போனவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அது கேட்டுக்கொண்டது.
கொலராடோ ஆற்றில் கலக்கும் பிரைட் ஏஞ்சல் ஓடையில், சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு தொடங்கியது.
பெருக்கெடுத்த நீர், ஓடையின் மீதான நடைப்பாலங்களை அடித்துச் சென்றதுடன், நிலப்பரப்பையும் கணிசமாக மாற்றியது. இதனிடையே, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை, பூங்கா ஊழியர்களும் அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறையினரும் 60-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளனர்.
தேசிய பூங்கா சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது.
சனிக்கிழமையன்று 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' (Bright Angel Creek) வழித்தடத்தையொட்டிய பள்ளத்தாக்கின் உட்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் அல்லது 'பேக்-பேக்கர்கள்' (backpackers) குறித்தோ,
அல்லது பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் முகாமிடுவதற்கான முன்பதிவு செய்திருந்தவர்கள் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் அரசு அமைப்பிற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட பூங்கா அதிகாரிகள்,
கொலராடோ ஆற்றில்
காணாமல் போன அல்லது விவரம் அறியப்படாதவர்களின் எண்ணிக்கையையும் தனி அறிக்கை ஒன்றில் வெளியிட்டனர். பிரைட் ஏஞ்சல் ஓடையின் (Bright Angel Creek) குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய அனைத்து நடைபாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்;
உலோகக் கட்டமைப்புகளும் இடிபாடுகளும் ஆற்றில் கலப்பதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை கொலராடோ ஆற்றில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வரையிலும் அப்பகுதியில் மேலும் மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், சுமார் 30 நிமிடங்களுக்குள் அரை அங்குலம் முதல் 1 அங்குலம் (1 சென்டிமீட்டர் முதல் 2.5 சென்டிமீட்டர்) வரை மழை பெய்ததாக ஃபிளாக்ஸ்டாஃபில் உள்ள தேசிய வானிலை சேவை வானிலை ஆய்வாளர் ஜஸ்டின் ஜான்ட்ரோ கூறியுள்ளார்.

கிராண்ட் கேன்யனின் வடக்குப் பகுதியில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர்; அப்பகுதியில் 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' நீரோடையானது வடக்குப் விளிம்பிலிருந்து (North Rim) கொலராடோ நதியை நோக்கி சுமார் 6,000 அடி (1,828 மீட்டர்) உயரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகம் மற்றும் தங்குமிடங்களைக் கொண்டதும், படகு சவாரி செய்பவர்கள் ஆற்றில் ஏறி இறங்குவதற்கான பொதுவான இடமாகவும் விளங்கும் ஃபாண்டம் ராஞ்சிலிருந்து 62 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; மேலும் பலர் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |