அவசர அவசரமாக ஜேர்மனியிலிருந்து தப்பியோடிய ரஷ்ய அதிபர் புடினின் சொகுசுக் கப்பல்: பின்னணி
ஜேர்மனியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பல் ஒன்று அவசர அவசரமாக அங்கிருந்து தப்பியோடியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
Graceful என்று அழைக்கப்படும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பல் ஒன்று ஜேர்மன் கப்பல் கட்டும் தளம் ஒன்றில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு முதல் அந்த சொகுசுக் கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை அவசர அவசரமாக அது அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
270 அடி நீளமுடைய, 73.2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய அந்த சொகுசுக் கப்பலில், ஒரு நீச்சல் குளம் உள்ளதாம். தேவையான நேரத்தில் அதை ஒரு நடன தளமாகவோ அல்லது ஹெலிகொப்டர் இறங்கும் ஹெலிபேடாகவோ மாற்ற இயலுமாம்.
இந்நிலையில், அந்த சொகுசுக் கப்பல் அவசர அவசரமாக ஜேர்மனியிலியிருந்து புறப்பட்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது, ரஷ்யா உக்ரைனை ஊடுருவினால் ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்றும், புடின் ஒளிந்துகொள்ள இடமே இருக்காது என்றும் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss எச்சரித்திருந்தார்.
ஆகவே, தனது சொகுசுக் கப்பல் பறிமுதல் செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அது அவசர அவசரமாக ஜேர்மனியிலிருந்து ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.