கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல்: பிரான்சை ஒதுக்கி வைத்த பிரித்தானியா
பிரித்தானியாவில் ஜூலை 19 முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ள நிலையில், பிரான்ஸ் மட்டும் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை 19 முதல், பிரித்தானியாவின் ஆம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து வருவோருக்கு, அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றிருக்கும் பட்சத்தில், 10 நாட்கள் தனிமைப்படுத்தல் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விடயத்தில் பிரான்ஸ் மட்டும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து பிரித்தானியா வருவோர், இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருந்தால் கூட, அவர்கள் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரான்சில், பீட்டா (தென்னாப்பிரிக்க வகை) கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சென்ற வாரத்தை கணக்கில் கொள்ளும்போது, பிரான்சில் 27,713 பேருக்குத்தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பிரித்தானியாவில் ஒரு வாரத்தில் 244,691 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒரு பக்கம் பழைய கோபத்தை எல்லாம் வைத்து பிரான்சை அவமதிப்பதுபோல் தோன்றினாலும், இன்னொரு பக்கம் இந்த பாரபட்சத்தால் பிரித்தானியர்களும்தான் பாதிக்கப்படப்போகிறார்கள்.
ஆம், பிரான்ஸ் சென்றுவிட்டு பிரித்தானியா திரும்பும் பிரித்தானியர்களுக்கும் இதேதான் கதி என்பதால், இது பிரான்சை ஓரங்கட்டும் செயலா அல்லது யானை தன் தலையின் மீது தானே மண்ணைப் போட்டுக்கொள்வது போன்ற ஒரு செயலா என்பது தெரியவில்லை!