பிரான்சில் இறுதி கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல்: நாளை முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்
நாளை முதல் (ஜூன் 30), பிரான்சில் நான்காவது மற்றும் இறுதிகட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன. அதன்படி, என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளன என்பதைக் காணலாம்.
முன்பு நாடு முழுவதுக்குமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உள்ளூர் மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மதுபான விடுதிகள், காபி ஷாப்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்ட நிலையில், எத்தனை பேர் ஒரு மேகையைச் சுற்றி அமர அனுமதிக்கப்படுவார்கள் என்பது போன்ற விடயங்கள் இனி உள்ளூர் மட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளன.
அதனால், முன்பு ஒரு மேஜையைச் சுற்றி 6 பேர் அமரலாம் என பொதுவாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு இடத்தில் 7 ஆக அதிகரிக்கலாம், மற்றொரு இடத்தில் 5 ஆக குறையலாம். தற்போது இசை நிகழ்ச்சிகள் முதலானவற்றில் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 முதல், இந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டு, நிற்கும் பார்வையாளர்களுக்கும் அனுமதியளிக்கப்பட உள்ளது. 1,000 பேருக்கு அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் சுகாதார பாஸ்போர்ட் வைத்திருந்தால்தான் அவர்களுக்கு அனுமதி.
அவர்கள் தாங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரம், அல்லது கடந்த 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டியிருக்கும். கோடை விழாக்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் கொஞ்ச காலத்துக்கு இரவு விடுதிகள் மூடித்தான் இருக்கும்.
அவை ஜூலை 9 வாக்கில் திறக்கப்பட உள்ளன, அதற்கும் சுகாதார பாஸ்போர்ட் அவசியம். உள் விளையாட்டு அரங்கங்களில் 1,000 பேருக்கு வரை அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் அந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன.
ஆனாலும், 1,000 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிக்கும் சுகாதார பாஸ்போர்ட் அவசியம்.