புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக பிரித்தானியாவுக்கே திரும்பிய விமானம்: ஒரு வேடிக்கை செய்தி
பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் ஒன்று, அவசர அவசரமாக பாதி வழியிலேயே புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஒரு வேடிக்கை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேடிக்கை என்னவென்றால், விமானத்தில் விமானியுடன் பணிக்கமர்த்தப்பட்ட சக விமானி, இன்னமும் தனது பயிற்சியையே முடிக்காதவராம்.
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்டுள்ளது Virgin Atlantic நிறுவன விமானம் ஒன்று.
விமானம் புறப்பட்டு அயர்லாந்துக்கு மேலே அது பறந்துகொண்டிருக்கும்போது, விமானத்தின் சக விமானி, தான் இன்னமும் விமானி பயிற்சியையே முடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
விமானத்தைச் செலுத்தும் விமானியின் சக விமானி, விமானியின் உத்தரவுகளை செயல்படுத்தவும், அவசர நேரங்களில் விமானத்தை தரையிறக்கவும், விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வது போன்ற பணிகளைச் செய்வதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அவர் பொறுப்பானவர் ஆவார்.
அப்படிப்பட்ட ஒரு பொறுப்புள்ள பணிக்கு, விமானி பயிற்சியையே முழுமையாக முடிக்காத ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததால், உடனடியாக விமானி விமானத்தை ஹீத்ரோ விமான நிலையத்துக்கே திருப்பியுள்ளார்.
பிறகு தகுதியான ஒரு விமானியுடன் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த தவறால் சுமார் 300 பயணிகள், கிட்டத்தட்ட 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு அமெரிக்கா சென்றடைந்துள்ளார்கள்.