ட்ரம்பின் அச்சுறுத்தல்... கனடா மற்றும் அமெரிக்கா இடையே விமான முன்பதிவுகள் கடும் வீழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு போருக்கு மத்தியில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான முன்பதிவுகள்
வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான முன்பதிவுகள் 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விமானப் பகுப்பாய்வு நிறுவனமான OAG இன் தரவுகளின்படி, கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையும் அக்டோபர் 2025 வரை குறைக்கப்பட்டுள்ளது.
உச்ச பயணப் பருவமாகக் கருதப்படும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மிகப்பெரிய குறைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் முன்பதிவுகள் தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன.
மார்ச் 2024 முதல் மார்ச் 2025 வரை கிடைக்கக்கூடிய முன்பதிவுகளை ஒப்பிடுகையில் 71 முதல் 76 சதவீதம் வரையில் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளுக்கான விமான இருக்கைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அக்டோபர் மாத இறுதி வரை இரு நாடுகளுக்கும் இடையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களால் 320,000 க்கும் மேற்பட்ட இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடுமையான சவாலை
மேலும், முன்பதிவுகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத சரிவு, கனேடிய பயணிகள் முன்பதிவு செய்வதைத் தாமதப்படுத்துவதைக் குறிக்கிறது என்றே கூறுகின்றனர். ஒருவேளை வரி விதிப்பு தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ட்ரம்பின் சமீபத்திய வரி விதிப்புகள் என்பது கனேடிய தொழிலாளர்கள் மீதான நேரடி தாக்குதல் என்றே கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணத்தில் சரிவு எதிர்பார்க்கப்பட்டாலும், முன்பதிவுகளில் கணிசமான 70 சதவீத சரிவு என்பது விமான நிறுவனங்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தக் கூடும்..
வர்த்தக ரீதியான அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும், சில கனேடியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை விரும்பவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |