சுவிஸ் பயணத்தினிடையே உறுதியான தகவல்: விமான கழிவறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்
அமெரிக்க பள்ளி ஆசிரியர் ஒருவர் நடுவானில் கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து விமான கழிவறையில் தனிமைப்படுத்திக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பள்ளி ஆசிரியரான Marisa Fotieo தமது சகோதரர் மற்றும் தந்தையுடன் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கொண்டாட முடிவு செய்து பயணப்பட்டுள்ளார்.
டிசம்பர் 20ம் திகதி சிகாகோவில் இருந்து ஐஸ்லாந்துக்கு மூவரும் புறப்பட்டுள்ளனர். அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். நியூ ஜெர்சியிலிருந்து ஐஸ்லாந்திற்கு சுமார் ஐந்து மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
இந்த நிலையில் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, Fotieo தனது தொண்டையில் வலியை உணர்ந்துள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கழிவறைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டவருக்கு, சில நிமிடங்களிலேயே தொற்று உறுதியானது.
அதிர்ச்சியில் உறைந்து போன Fotieo உடனடியாக விமான ஊழியர் ஒருவரிடம் நடந்தவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பொறுமையாக கேட்டுக்கொண்ட அந்த ஊழியர், கழிவறையிலேயே எஞ்சிய பயண நேரத்தை செலவிட அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், எஞ்சிய விமான பயணிகளிடம், அந்த ஊழியர் மாஸ்க் அணிந்து கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து சுமார் 4 மணி நேரம் விமான கழிவறையில் செலவிட்டுள்ளார் Fotieo.
இதனிடையே ஐஸ்லாந்தில் விமானம் தரையிறங்க, உடனடியாக செஞ்சிலுவை ஹொட்டல் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் ஆசிரியர் Fotieo-வின் சகோதரரும் தந்தையும் சுவிட்சர்லாந்துக்கு தங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர்.