பிரித்தானிய விமான நிலையங்களில் கூச்சல் குழப்பம்... மணிக்கணக்கில் காத்திருக்கும் பயணிகள்
பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருப்பதாகவும், விமான நிலையத்திலேயே இரவு தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான விமானங்கள் அரை ஆண்டுக்கு முன்னதாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று பகல் பிரித்தானிய விமான நிலையங்களில் பெரும் கூட்டம் அலைமோதியதாக கூறப்படுகிறது.
காலை 5 மணி முதல் பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் நிலைக்கு குடும்பங்கள் பல தள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, மான்செஸ்டரில் உள்ள பயணிகள் ஐந்து மணிநேரம் வரையில் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இதே நிலை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் உள்ள பயணிகள் பலர் எதிர்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, விமானங்கள் திடீரென்று ரத்தான நிலையில் இரவு விமான நிலையத்திலேயே தூங்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வெளியேயும் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், விமான நிலையமா அல்லது உயிரியல் பூங்காவா என பலர் கேலி செய்துள்ளனர்.
இதனிடையே, TUI நிர்வாகம் பல மணி நேரம் பயணிகளை காத்திருக்க வைத்து, பின்னர் குறுந்தகவலில் விமானம் ரத்தான தகவலை தாமதமாக தெரிவித்ததாக பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே விமான நிலையங்களில் கூச்சல் குழப்பம் நீடிப்பதாக நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த பத்து நாட்களில் கேட்விக்கில் இருந்து 200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்வதாக ஈஸிஜெட் நிர்வகாம் அறிவித்துள்ளது.
நாளுக்கு 24 விமானங்கள் இதனால் ரத்தாகும் சூழல் இருப்பதாகவும், ஜூன் 6ம் திகதி வரையில் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்லது குறிப்பிடத்தக்கது.