பிரான்சின் பல பகுதிகளை துவம்சம் செய்த புயல்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்
பிரான்சின் வடக்கு துவங்கி தெற்கு வரையில் பல்வேறு பகுதிகளை துவம்சம் செய்த புயலால் பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வார இறுதியில் பிரான்சை துவம்சம் செய்த புயல்
வார இறுதியில் தெற்கு பிரான்சின் பல பகுதிகளை துவம்சம் செய்த நிலையில், Occitanie மற்றும் Nouvelle Aquitaine பகுதிகள், ஆலங்கட்டி மழை மற்றும் பெருவெள்ள பாதிப்புக்குள்ளாகின.
புயலுடன் மின்னல்களும் வானை ஒளிரச் செய்தன. தென்மேற்கு பிரான்சில், சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில், 400 சதுர மீற்றர் அளவிலான கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
அதேபோல, பிரான்சின் மேற்கிலுள்ள ஒரு இடத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் கூரை ஒன்றில் மின்னல் தாக்கியதில் அந்தக் கட்டிடத்திலும் தீப்பிடித்தது.
இரண்டு இடங்களிலும் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்த நிலையில், இந்த சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தெற்கில் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், தலைநகர் பாரீஸில் வீசிய புயல் அந்த அளவுக்கு வலுவாக இல்லை என்றாலும், ஞாயிறு இரவு பல விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட நேரிட்டது.
பாரீஸ் Charles de Gaulle விமான நிலையத்தில் இறங்கவேண்டிய சுமார் 20 விமானங்கள், Orly, Nantes, Lyon ஆகிய விமான நிலையங்களில் இறங்க, சில விமானங்கள் பெல்ஜியம் நாட்டிலும்கூட தரையிறங்க நேரிட்டது.
சில விமானங்கள், புறப்பட்ட விமான நிலையத்துக்கே திருப்பி விடப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |