இலங்கையில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையா் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
நாடளாவிய ரீதியில் கடும் மழையும் பலத்த காற்றும் வீசி வருகின்றது. பல மாவட்டங்களில் மண்சரிவு வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால் பலி எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (05) அதிகாலை 06 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தலா 02 பேரும், கேகாலை மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 23 பேரும் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மழையுடன் கூடிய வானிலை நிலவி வருவதால், 13 மாவட்டங்களில் 65,777 குடும்பங்களைச் சேர்ந்த 2,47,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41 வீடுகள் முழு சேதம் அடைந்துள்ளது.
4,162 குடும்பங்களைச் சேர்ந்த 15,735 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 2,592 குடும்பங்களைச் சேர்ந்த 10,820 பேர் 151 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அத்தனகல ஓயாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை நாளை மாலை 03 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால், தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் கம்பஹா, வத்தளை, ஜா-எல, கட்டான, மினுவங்கொட ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |