பிரித்தானியாவில் ஹோட்டலில் நள்ளிரவு பற்றிய தீ: சந்தேகம் எழுப்பும் காவல்துறையினர்
Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஹோட்டலில் பரவிய தீ
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பிரபல கிராண்ட் பர்ஸ்டின் ஹோட்டலில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் அவசர கால சேவையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்
கிட்டத்தட்ட 26 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஹோட்டலில் பரவிய தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ஹோட்டலின் அடித்தளத்தில் இருந்து தீயானது பரவியிருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.
ஹோட்டலில் பற்றிய தீயின் நிலவரத்தை சுதாரித்துக் கொண்ட அவசரகால மீட்புக் குழுவினர் அங்கு தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்ட சதியாக இருக்கலாம்
ஹோட்டலில் நிகழ்ந்த இந்த தீ விபத்து வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ எரிப்பு சம்பவமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் யாரேனும் நடமாடியதை கண்டிருந்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 10.00 முதல் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரையிலான நேரத்தில் பதிவான டாஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.