அடுத்த வருடம் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு? கடும் எச்சரிக்கை
உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாரிய எதிர்நிலை சவாலை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் கையிருப்பிலுள்ள அந்நிய செலாவணி தொகை வெகுவாக குறைவடைந்து வருவதை அடுத்து, பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் தற்போது பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, ஏனைய பொருட்களுக்கான விலை பெருமளவு அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
எரிபொருள் விலையேற்றம்
இலங்கையில் எரிபொருளுக்கான விலையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் முன் அறிவித்தலின்றி, திடீரென அதிகரித்திருந்தது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் விலையை 20 ரூபாய் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 177 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 23 ரூபாய் அதிகரித்த நிலையில், அதன் புதிய விலை 207 ரூபாயாக காணப்படுகின்றது.
ஒரு லிட்டர் டீசலின் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 121 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 159 ரூபாயாகும்.
மண்ணெண்ணை ஒரு லிட்டரின் விலை 10 ரூபாய் அதிகரித்துள்ள பின்னணியில், அதன் புதிய விலை 87 ரூபாயாக காணப்படுகின்றது.
இலங்கை எதிர்நோக்கி வரும் அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிப்பதற்கு டாலர் இல்லாமையினால், டாலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிக்கின்றார்.
எரிபொருள் விலையேற்றப்படுவதை அடுத்து, எரிபொருள் பயன்பாடு குறைவடையும் என அவர் கூறுகின்றார்.
அதனால், எரிபொருள் கொள்முதலை குறைத்துக்கொள்ள முடியும் என நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிக்கிறார்.
பொருட்கள் சேவைகளின் விலைகளும் திடீரென அதிகரிப்பு
இலங்கையில் ஏற்கனவே பொருட்களுக்கான விலைகள், கட்டுப்பாட்டை இழந்து அதிகரித்திருந்த நிலையில், எரிபொருள் விலையேற்றத்துடன் மீண்டும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் மற்றும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, உணவுப் பொருட்களுக்கு காணப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவு பொருட்கள் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை காண முடிகிறது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலம் முதலாவது கிலோமீட்டருக்கு அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற கட்டணம், தற்போது 80 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 45 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கூறுகின்றது.
பஸ் கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலையேற்றத்துடன் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
15 முதல் 20 வீதத்தினால் பஸ் கட்டணம் அதிகரிக்க வேண்டும் என அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன், பஸ் உரிமையாளர்கள் அண்மையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இதன்படி, பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு
நாடு முழுவதும் மரக்கறி வகைகளுக்கான விலைகள் சடுதியாக அதிகரித்து வந்த நிலையில், எரிபொருள் விலையேற்றத்துடன் மேலும் மரக்கறி விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், செயற்கை உரத்திற்கு அரசாங்கம் தடை விதித்த நிலையில், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மரக்கறிகளின் விலைகள் அண்மை காலமாக வெகுவாக அதிகரித்திருந்தன.
சில மரக்கறிகளின் விலைகள் 500 ரூபாயை தாண்டியிருந்ததுடன், சில மரக்கறிகளின் விலைகள் 1,000 ரூபா வரை அதிகரித்திருந்தன.
இவ்வாறான பின்னணியில், தற்போது எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ளமையினால், மரக்கறி கொண்டு செல்வதற்கான செலவினம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
அதனால், எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளுக்கான விலைகள் மேலும் அதிகரிக்கும் என மரக்கறி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவிக்கிறார்.
நாட்டில் தற்போது காணப்படுகிற நிலைமையின்படி நிச்சயமாக உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என அவர், ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.
செயற்கை உரம் உள்ளிட்ட பிரச்சினைகளின் போது, விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய உதித் கே ஜயசிங்கவிற்கு பதிலாக, புதிய செயலாளர் ஒருவர் விவசாய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பிய தருணத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது செய்யப்பட்டுள்ள விளைச்சல் குறித்து அவதானிக்கும் போது, நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதனை உறுதியாக கூற முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.
முன்னெச்சரிக்கையுடன் செயற்படும் பட்சத்தில், இந்த நிலைமையை தவிர்த்துக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, தான் இதனைக் குறிப்பிடுவதாகவும் அவர் கூறுகின்றார்.
அடுத்த வருடம் நிச்சயம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் - மஹிந்த அமரவீர
அடுத்த வருடம் நிச்சயமாகவே உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் அமைச்சரவையில் பல்வேறு தடவைகள் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தரவுகள் மற்றும் கள ஆய்வுகளின் ஊடாக, தனக்கு இதனை உறுதியாக கூற முடியும் என அவர் கூறுகிறார்.
இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளும் இந்த உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
விவசாயத்தை அதிகரிக்கும் நோக்குடன், புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
விவசாய அமைச்சரின் பதில்
இலங்கையில் எதிர்வரும் ஆண்டு உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பதனை தான் உறுதியாக கூறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.
விவசாய நிலங்களில் 90 முதல் 95 வரையான காணிகளில் விவசாயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால், நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என அவர் கூறுகிறார்.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என வெளியிடப்படும் கருத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கிறார்.
பொருளியல் நிபுணரின் பார்வை
இலங்கையில் உணவுக்கான தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படும் என்ற போதிலும், உணவுத் தட்டுப்பாட்டினால் எவரும் உயிரிழக்கும் நிலைமை ஏற்படாது என களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் பண்டார வன்னிநாயக்க தெரிவிக்கின்றார்.
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலையில், பலருக்கு உணவு உட்கொள்ளும் அளவை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகிறார்.
விவசாய பொருட்களின் விநியோகம் குறைவடையும் போது, அந்த விவசாய பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், ஏனையோருக்கு உதவும் இலங்கையர்களின் கலாசாரத்தினால், எவரும் உயிரிழக்கும் நிலைமை ஏற்படாது என அவர் தெரிவிக்கிறார்.
பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை இலங்கையில் என்றும் ஏற்படாது என அவர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், பொருளாதார ரீதியில் பெருமளவிலான பாதிப்புக்கள் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் என களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் பண்டார வன்னி நாயக்க தெரிவிக்கின்றார்.