வீடே மணக்கும் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
கருவாட்டின் வாசனை பலருக்கும் அலர்ஜி என்றாலும், அதனை குழம்பாக வைத்த பின் யாராக இருந்தாலும் ஒரு பிடிபிடித்து விடுவார்கள்.
வீடே மணக்கும் கருவாட்டு குழம்பை, அடுத்த நாள் சாப்பிட்டால் அதன் ருசியே அலாதி தான்.
அப்படி ருசியாக கருவாட்டு குழம்பை செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருவாடு - 3 துண்டுகள்
புளி- தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் -1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, வெந்தயம்- தேவையான அளவு
நல்லெண்ணெய்- தேவையான அளவு
வறுத்து அரைக்க
மிளகாய் வத்தல் - 4
மல்லி - 3 மேஜைக்கரண்டி
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு பற்கள் - 2
அரைக்க
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
செய்முறை
கருவாடு துண்டுகளை சுமார் 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
புளியை கரைத்துவிட்டு, வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், மல்லி, மிளகு, சீரகம், பூண்டுப் பற்கள் எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து, ஆறவைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைப்பதற்காக அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
இதன்பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் இதனுடன் தக்காளி சேர்க்கவும், பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மஞ்சள் தூள் சேர்த்துவிட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும், பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைத்து விட்டு, தேங்காய் கலவையை சேர்க்கவும்.
கடைசியாக கருவாடை சேர்த்து கருவாடு வேகும் வரை கொதிக்க விடவும், கருவாடும் உப்பு என்பதால் கடைசியாக உப்பை சரிபார்த்துவிட்டு தேவையெனில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டால் சுவையான கருவாட்டு குழம்பு தயார்!!!