கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள்... நிம்மதியை அளித்துள்ள ஒரு செய்தி
பிரான்சில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உணவகங்களுக்கு நிதி வழங்க பிரெஞ்சு காப்பீட்டு நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது. பிரெஞ்சு காப்பீட்டு நிறுவன ஜாம்பவானான Axa நிறுவனம், கொரோனா பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுமார் 15,000 உணவகங்களுக்கு 300 மில்லியன் யூரோக்கள் வழங்க முன்வந்துள்ளது.
பல உணவக உரிமையாளர்கள், Axa நிறுவனம் தான் ஒப்புக்கொண்டதுபோல காப்பீட்டுத்தொகையை வழங்காமல் பின்வாங்க முயல்வதால் தங்கள் வாழ்வாதாரமே அபாயத்தில் இருப்பதாக அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்ததையடுத்தே அந்நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையாலேயே இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாகிவிட்டது, அதற்காக வருந்துகிறேன் என்று கூறியுள்ள Axa நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Thomas Buberl, இப்போது கேட்காமலே பலருக்கு செட்டில்மென்ட் அளிக்கிறோம், சொல்லப்போனால், வழக்குத் தொடர்ந்து தோற்றவர்களுக்குக் கூட என்றார்.
எங்கள் வாடிக்கையாளர்களான உணவகங்களுக்கு இந்த காலகட்டத்தில் துணை நிற்க
விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், இந்த இக்கட்டான சூழலை தாண்டி வெளியே
வருவது மிகவும் அவசியம் என்றார்.