சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வர புலம்பெயர்வோருக்கு உதவும் எல்லை பாதுகாப்பு படை: ஒரு பகீர் தகவல்
சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் கொண்டு வர, இரு நாட்டு பாதுகாப்புப் படைகள் கைகோர்த்த சம்பவம் ஒன்று அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழையும் பிரச்சினை, பிரித்தானிய உள்துறைக்கு பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில், அதை எப்படியாவது கட்டுப்படுத்திவிட தலைகீழாக நிற்பதைத் தவிர அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறார் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
ஆனால், பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையே பிரான்ஸ் கடற்படையுடன் கைகோர்த்துக்கொண்டு புலம்பெயர்வோரை பத்திரமாக பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொண்டு வந்தால் என்ன செய்வார் அவர்! நேற்று முன்தினமும் அதுதான் நடந்திருக்கிறது.
பக்காவாக இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளும் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளன. அதன்படி, பிரெஞ்சு மீட்புப் படகான Abeille Liberte, பிரான்ஸ் துறைமுகமான Boulogne துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது.
ரப்பர் படகு ஒன்றில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 புலம்பெயர்வோர் பயணிக்க, அவர்களுடன் பாதுகாப்பாக பயணித்த Abeille Liberte, சட்ட விரோதமாக ஆங்கிலக் கால்வாயின் பிரித்தானிய பகுதி வரை வந்திருக்கிறது.
இதற்கிடையில், தனது ரேடியோ மற்றும் ட்ராக்கிங் சிஸ்டம் அனைத்தையும் அணைத்துவிட்டு பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையின் படகான Seeker அங்கு காத்திருந்திருக்கிறது.
ரப்பர் படகில் வந்த 30 புலம்பெயர்வோரையும் ஏற்றிக்கொண்டு, பீர்த்தானிய படகான Seeker பிரித்தானியாவின் Dover துறைமுகத்தை அடைந்துள்ளது.
ஆக, சட்ட விரோதமாக பிரான்ஸ் வழியாக பிரித்தானியாவுக்கு வரும் புலம்பெயர்வோருக்கு, இரு நாடுகளும் உதவுவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த பகீர் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து பிரீத்தி பட்டேல் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்கப் போகிறாரோ தெரியவில்லை.