கனடா அனுப்பிய 300 வென்டிலேட்டர்கள்... இந்தியா வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தகவல்
கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கனடா அனுப்பிய 300 வென்டிலேட்டர்கள் இந்தியாவை அடைந்துள்ளன.
இதுகுறித்து இந்திய வெளிவிவகாரங்கள் துறை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், ’சர்வதேச ஒத்துழைப்பு தொடர்கிறது. நமது கூட்டாளியான கனடா அனுப்பிய 300 வென்டிலேட்டர்களை நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த சனிக்கிழமை, 50 வென்டிலேட்டர்கள் மற்றும் 25000 Remdesivir போத்தல்களும் இந்தியா வந்தடைந்துள்ளன. கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா தடுமாறிவரும் நிலையில், பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன.
சமீபத்தில், இத்தாலி 30 ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் இரண்டு வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் 3,62,727 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 4,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, மொத்தம் 2,37,03,665 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு
ஆளாகியுள்ளதுடன், 2,58,317 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.