சுவிட்சர்லாந்தில் சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்: ஒரு வியப்பூட்டும் தகவல்
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பொதுவாக சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாகத்தான் இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், சில துறைகளில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் மட்டும் சுவிஸ் குடிமக்களை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள் கூறும் தகவல்கள்.
பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள்
அதாவது, என்ன பணி, எந்த துறை என்பதைப் பொருத்து, எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குப் பணி செய்யவருவோர் உட்பட, வெளிநாட்டவர்கள், சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுவதாக நேற்று முன் தினம் வெளியான பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
எந்தெந்த பணிகளில் வெளிநாட்டவர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?
சுவிஸ் குடிமக்களின் சராசரி ஊதியம் மாதம் ஒன்றிற்கு 10,476 சுவிஸ் ஃப்ராங்குகள். ஆனால், நடுத்தர மற்றும் உயர் மேலாண்மைப் பணிகளில், B உரிமம் வைத்திருப்போருக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் ஊதியம், 12,791 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும்!
அவர்களுக்கு அடுத்தபடியாக, C உரிமம் வைத்திருப்போர், 11,495 ஃப்ராங்குகளும், G உரிமம் வைத்திருப்போர், அதாவது, எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்கு வந்து பணியாற்றுவோர் 10,707 ஃப்ராங்குகளும் ஊதியம் பெறுகிறார்களாம். ஆக, இவர்கள் அனைவருமே சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறுகிறார்கள்.
சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட காரணம் என்ன?
சில துறைகளில், பணியாளர் பற்றாக்குறை நிலவுவதே, சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட காரணம் என்கிறது பெடரல் புள்ளியியல் அலுவலகம்.
இந்தப் பணிகளைப் பொருத்தவரை, அவற்றைச் செய்பவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதைவிட, அந்தப் பணிக்கு பணியாளர்கள் கிடைக்காததே, அந்தப் பணிகளில் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதற்குக் காரணம் என்கிறார் மனிதவளத்துறை நிபுணரான Stéphane Haefliger.
ஆனாலும், சுவிஸ் சட்டப்படி, இந்தப் பணிகளைச் செய்ய சுவிஸ் குடிமக்களில் ஆட்கள் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, அந்தப் பணிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |