சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் பணி இழக்கும் அபாயம்
சில குறிப்பிட்ட சூழல்கள் சுவிட்சர்லாந்தில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் பணியை இழக்கும் நிலையை உருவாக்கலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
காலாவதியாகும் பணி அனுமதி
பொதுவாக வெளிநாட்டவர்கள் L அல்லது B பணி அனுமதி வைத்திருப்பார்கள். L அனுமதி குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே, அதாவது ஓராண்டுக்கும் குறைவான காலம் மட்டும் பணி செய்ய அனுமதிக்கும் அனுமதி. சில B அனுமதிகளும் அப்படித்தான். ஆக, உங்கள் பணி அனுமதி காலாவதியானால் நீங்கள் பணி இழக்கலாம்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவரா, ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றைச் சேர்ந்தவரா அல்லது மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவரா என்பதைப் பொருத்து இந்த பணி அனுமதிகள் நீட்டிக்கப்படலாம்.
உங்கள் பணி அனுமதியை புதுப்பிக்கத் தவறினால்
பொதுவாக உங்கள் பணி அனுமதி காலாவதியாகுவதற்கு ஆறு வாரங்கள் முன், அதை புதுப்பிக்கக்கோரி உள்ளூர் அதிகாரிகள் உங்களுக்குக் கடிதம் அனுப்புவார்கள்.
ஆனால், அதன்படி நீங்கள் உங்கள் பணி அனுமதியை புதுப்பிக்கத் தவறுவீர்களானால், உங்கள் பணி அனுமதியை நீங்கள் இழக்க நேரலாம்.
உங்கள் பணி ஒதுக்கீடு (quota) புதுப்பிக்கப்படவில்லையானால்
நீங்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றையோ, அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றையோ சேராதவராக இருந்தால், உங்கள் பணி, பணி ஒதுக்கீட்டின் அடிப்படையிலானதாக இருக்கும்.
இந்த பணி ஒதுக்கீடு வருடந்தோறும் புதுப்பிக்கப்படும். அப்படி பணி ஒதுக்கீடு குறைந்த அளவிலேயே புதுப்பிக்கப்படுமானால், அதனால் உங்கள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்படவில்லையானால், உங்களுக்குப் பணி வழங்குபவர் உங்களை பணியிலிருந்து வெளியேற்றலாம்.
இதுபோக, உங்கள் சக சுவிஸ் நாட்டுப் பணியாளர்கள் பணியிலிருந்து ஏதோ ஒரு காரணத்துக்காக மொத்தமாக வெளியேற்றப்படும்போது, உதாரணமாக பெருமளவில் ஒரு நிறுவனத்திலிருந்து பணியாட்களை வீட்டுக்கு அனுப்புதல், அல்லது நிறுவனம் திவாலாகுதல் போன்ற நிலை உருவாகுமானால், நீங்களும் அதே நிறுவனத்தில் பணி செய்யும் பட்சத்தில் நீங்கள் பணி இழக்க நேரிடலாம்.