விராட் கோலியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது! இங்கிலாந்து அணி முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஓட்டங்கள் குவிக்க திணறுவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது என, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.
ரன் மெஷினாக விளங்கிய விராட் கோலி தற்போது ஓட்டங்கள் எடுக்க திணறி வருகிறார். இதனால் ரசிகர்கள் இடையில் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், கோலி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கோலி குறித்து கூறுகையில், 'கோலி இரு மனங்களில் துடுப்பாட்டம் செய்வதால் பந்தை ஸ்டம்பிற்குள் அனுமதித்து ஆட்டமிழக்கிறார். ஒரு ஷாட்டை எப்படி ஆட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அதை எவ்வாறு கையாள்வது என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை.
இந்த விடயத்தில் அவர் மனதை தெளிவுபடுத்த வேண்டும். அவர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அவர் தவறுகளின் எண்ணிக்கையை குறைத்து, மேலும் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அவரது விக்கெட்டுக்கு இருக்கும் மதிப்பை அவர் உணர வேண்டும். அவர் அதைச் செய்யத் தொடங்கும் தருணத்தில், தவறுகள் குறைக்கப்படும்.
PC: Reuters
பெரிய ஓட்டங்களை பற்றி அவர் சிந்திக்கக் கூடாது. இலக்குகள் சிறியதாக இருக்கட்டும், அதிக சிங்கிள்களை எடுக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஓட்டங்கள் அவருக்கு நம்பிக்கையைத் தரும். இது ஒரு மன விளையாட்டு மற்றும் இவ்வளவு பெரிய வீரர் ஓட்டங்கள் எடுக்க திணறுவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
PC: Twitter