வீரர்களை கண்காணிக்க பாகிஸ்தான் அணி செய்த காரியம்! பத்து ஆண்டுகளுக்கு பின் கூறிய வாரிய தலைவர்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் வீரர்களை கண்காணிக்க அவர்களது மனைவிகளை உடன் அனுப்பியதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் வீரர்கள் எந்தவித சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விழிப்புடன் இருந்தது. அதற்காக பாகிஸ்தான் வீரர்கள் பயணம் மேற்கொண்டபோது அவர்களுடன் அவர்களது மனைவிகளையும் உடன் அனுப்பி வைத்தது.
அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஸகா அஷ்ரஃப் பணியாற்றினார். இது குறித்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், 'எனது பதவிக் காலத்தில் எங்கள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றபோது, வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் வருவார்கள் என்று அறிவுறுத்தினேன். அவர்களது மனைவிகள் வீரர்களை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று கூறினேன். முதலில் வீரர்கள் சற்று ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் இறுதியில் எல்லோரும் அதை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றனர்.
இந்தியா எப்பொழுதும் எங்கள் வீரர்களை சிக்க வைத்து, எங்கள் நாட்டின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கும். ஆனால் முந்தைய சுற்றுப்பயணங்களின் போது எங்கள் வீரர்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர்.
இந்திய ஊடகங்கள் எப்பொழுதும் அவதானித்துக் கொண்டிருப்பதால் எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால், சர்ச்சைகளை தவிர்க்க முடிந்தது' என தெரிவித்துள்ளார்.