முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜரின் மரணதண்டனை நேரலை செய்யப்படும்: ட்ரம்ப் ஒப்புதல்
Fort Hood attacker's execution: ஃபோர்ட் ஹூட் தாக்குதல்தாரியின் மரணதண்டனை.
முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை பொதுமக்கள் நேரலையில் பார்க்கலாம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
கடும் கண்டனம்
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறும் முதல் பகிரங்க மரண தண்டனை நிறைவேற்றம் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட்டில் ஆயுதமற்ற 13 அமெரிக்க வீரர்களைச் சுட்டுக் கொன்ற நிதால் ஹசனின் மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் பிபிசி-யிடம் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் பணியாற்றும் சட்டத்தரணியான ஜான் மில்ஸ் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதை நேரலையில் ஒளிபரப்பும் முடிவு, நவீன காலத்திலும் நிச்சயமற்ற சட்டச் சூழலிலும் முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று கூறினார்.
ஆனால், மக்கள் அதைப் பார்க்க முடிவதையும், அது பொதுவெளியில் காணக்கிடைப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம் என்று தீவிர வலதுசாரியான ஹெக்ஸெத் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற விடயங்களுக்குக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாத முதல் இராணுவ மரணதண்டனையாக ஹசனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று பென்டகன் இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
மேலும், இராணுவ வீரர்களால் ஹசனுக்கான மரணதண்டனை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாகவும் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஹசன் ஏதேனும் இறுதிக் கோரிக்கைகளை விடுத்தாரா அல்லது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தொடர்பு கொள்ள வேண்டினாரா என்று கேட்டதற்கு, அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்றும் ஹெக்ஸெத் பதிலளித்துள்ளார்.
பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஹெக்ஸெத் இந்தப் பரிந்துரையை முன்வைத்ததாகவும், ட்ரம்ப் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் திங்களன்று தெரிவித்திருந்திருந்தார்.
ஆனால் உண்மையில், ஹசனின் மரணதண்டனையை நேரலை செய்ய ட்ரம்ப் ஒப்புக்கொண்டாரா என்பதில் வெள்ளை மாளிகை இதுவரை விளக்கமளிக்கவில்லை.
டிசம்பர் 3 ஆம் திகதி
கடந்த ஆண்டு 17 நாடுகளில் 2,700-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டபோதிலும், இரண்டு நாடுகள் மட்டுமே அவற்றை பகிரங்கமாக நிறைவேற்றின. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளில், 2025-ஆம் ஆண்டில் ஈரானில் 11 பேர்களும், ஆப்கானிஸ்தானில் 6 பேர்களுக்கும் பகிரங்க மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் என்ற இடத்தில் டிசம்பர் 3 ஆம் திகதி ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அமெரிக்க ராணுவச் செயலாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, துப்பாக்கிச் சுடும் படையால் நிறைவேற்றப்படும் முதல் இராணுவ மரணதண்டனை இதுவாக இருக்கும்.
வர்ஜீனியாவைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ மனநல மருத்துவரான ஹசன், அமெரிக்க ராணுவத் தளம் ஒன்றில் போர்ச் சூழல் அல்லாத தாக்குதல்களிலேயே மிக மோசமான தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரி தான் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2009-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம், பணிக்குச் செல்லவிருந்த வீரர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் காத்திருந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த மருத்துவக் கட்டடம் ஒன்றில் நிகழ்ந்தது.
இதனூடாக ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களையும் தலிபான்களையும் தான் பாதுகாப்பதாக நம்பியதாக 2013-இல் நடைபெற்ற தனது இராணுவ நீதிமன்ற விசாரணையின்போது அவர் கூறியுள்ளார்.
இராணுவச் சட்டத்தின்படி, இராணுவ ரீதியான மரண தண்டனையை நிறைவேற்ற அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்புதல் தேவைப்படுகிறது. மேலும், மேல்முறையீட்டு ஆய்வும் இதற்கு அவசியமாகும்; இதில் ஒரு உயர் நீதிமன்றம் அந்த முடிவை மறுஆய்வு செய்து, அதனைச் செயல்படுத்தும் நடவடிக்கையின் சட்டப்பூர்வத் தன்மை குறித்த இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஆனால், ஹசனுக்கான மேல்முறையீட்டு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை, அவர் தனது குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனையை ஃபெடரல் நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யக் கோர வாய்ப்புள்ளது என்றும், அது மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கூடும் என்றும் சட்டத்தரணி ஜான் மில்ஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, நேரலை ஒளிபரப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பதில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆபாசமான அல்லது மக்களுக்கு உளவியலாக தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நேரலை செய்வதைத் தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் விதிகளைப் பெரும்பாலான முக்கிய சமூக ஊடகத் தளங்கள் கொண்டுள்ளன.
இதுவரை வெளிப்படையாக மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ட்ரம்ப் ஒருபோதும் ஆதரவு தெரிவித்ததில்லை என்றாலும், மரணதண்டனை முறைக்கு அவர் நீண்டகாலமாக ஆதரவளித்து வருகிறார்.
மட்டுமின்றி, ஈரான் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வந்ததால் கடும் விமர்சனங்களுக்கு இலக்கானவர் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் என்பதும் குறிப்பிடத்தக்கது.