நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிரெஞ்சு சிறுமி கடத்தல் வழக்கு: கடத்தியவர்கள் தீவிரவாதிகளா?
பிரான்சில் மியா என்ற சிறுமி கடத்தப்பட்ட விடயம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவளைக் கடத்தியவர்கள் தீவிரவாதிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செவ்வாயன்று, கிழக்கு பிரான்சிலுள்ள Vosges என்ற இடத்தில் அமைந்துள்ள தனது பாட்டியின் வீட்டிலிருந்து மியா என்ற 8 வயது சிறுமி கடத்தப்பட்டாள்.
நேரத்தியாக திட்டமிட்டிருந்த கடத்தல்காரர்களில் மூவர் தங்களை சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் போல காட்டிக்கொண்டு மியாவை அழைத்துச் செல்ல, நான்காவது நபர் தயாராக காரில் காத்திருந்திருக்கிறார்.
குழந்தையைக் கடத்திச்சென்று, 20 நிமிடங்களில் அதன் தாயிடம் ஒப்படைத்துள்ளார்கள் அவர்கள் நால்வரும். ஆம், அந்த குழந்தை தாயிடமிருந்து சட்டப்படி பிரிக்கப்பட்டு அதன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்திருக்கிறது.
அதை ஏமாற்றி கடத்தி எங்கோ அழைத்துச்சென்று விட்டார் அந்த பெண். அவர் வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இந்நிலையில், குழந்தை மியாவைக் கடத்திய நான்கு பேரும் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள். அவர்கள், தங்களை ஒருவர் இணையம் வாயிலாக தொடர்புகொண்டதாகவும், அவர் திட்டத்துக்கேற்ப குழந்தையைக் கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படுபவர்களில் ஒருவரின் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் சிக்கின.
கைது செய்யப்பட்ட நால்வரும்கூட தீவிரவாதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தின்பேரில், தீவிரவாத எதிர்ப்பு அதிகாரிகள் அவர்களை விசாரித்து வருகிறார்கள். அவர்கள் நால்வரும், கொரோனா தடுப்புசி மையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், மியாவையோ அவரது தாயான லோலாவையோ (28) இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவம் நடந்த Vosges பகுதி, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பெல்ஜியம் எல்லைகளுக்கருகில் அமைந்துள்ளதால் லோலா குழந்தையை அங்கு எங்காவது கடத்திச் சென்றிருக்கலாம் என்று கருதி பொலிசார் வெளிநாட்டு அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளார்கள்.