வெளிநாட்டில் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரித்தானிய குடும்பத்தில் நான்காவது மரணம்
வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்கள் சிலர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது நினைவிருக்கலாம்.
தற்போது அந்தக் குடும்பத்தில் நான்காவது நபரும் உயிரிழந்துள்ளார்.
ஜூலை மாதம், பிரித்தானியாவின் Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றிருந்தனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்த நிலையில், ஜூலை 26ஆம் திகதி, சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam (51)மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.
Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள். ஆனால், பிரேதப் பரிசோதனையில், அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர், Rafiqul குடும்பத்தினர் தங்கியிருந்த குடியிருப்பில், மின்சாரம் தடைபட்டால் பயன்படுத்துவதற்காக ஒரு பழைய ஜெனரேட்டர் இருந்ததும், அதிலிருந்து வெளியான புகையால் மூச்சுத்திணறி, கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக Rafiqulம் அவரது மகனும் உயிரிழந்ததும் தெரியவந்தது.
ஒரு வாரத்திற்குப் பின், Rafiqul, Husnara (45) தம்பதியரின் மகளான Samira Islam (20) மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின், தற்போது Rafiqulஇன் மனைவியாகிய Husnaraவும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய, தம்பதியரின் மற்றொரு மகனான Sadiqul Islam (24) மட்டுமே இப்போது அந்தக் குடும்பத்தில் உயிருடன் இருக்கிறார்.
பிரித்தானியாவிலிருந்து விடுமுறைக்காக சென்ற இடத்தில் ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் உயிரிழந்துவிட்ட விடயம் அந்தக் குடும்பத்தில் நீங்கா துயரை உருவாக்கிவிட்டது.