69 வயது பிரான்ஸ் நபருக்கு தமிழ்நாட்டில் திருமணம்! ஆப்பிரிக்க பெண்ணை கரம்பிடித்தார்
பிரான்ஸைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர், ஆப்பிரிக்க பெண்ணை தமிழ்நாட்டை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் முறைப்படி திருமணம்
தெற்கு பிரான்ஸின் Montpellier நகரைச் சேர்ந்தவர் யுவெஸ் அர்னெய்ல் லே (69). இவரும், ஆப்பிரிக்க நாடான டோகோவைச் சேர்ந்த ஜூலியென் சரௌனா லே (60) என்ற பெண்மணியும், தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவெடித்தனர்.
அதற்காக அவர்கள் தெரிவு செய்த இடம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் முருகன் கோயில் ஆகும்.
அங்கு உள்ளூர் மக்களின் முன்னிலையில் மாலை மாற்றி, தாலி கட்டி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மணமகளுக்கு யுவெஸ் மெட்டி அணிவித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நண்பரின் தோட்டத்தில் திருமண விருந்து
மணமகன் யுவெஸ் திருமணம் முடித்த கையோடு, மானாமதுரை முத்துராமலிங்கபுரம் அருகே உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் திருமண விருந்து அளித்தார்.
இந்த திருமண நிகழ்வில் பொதுமக்கள், நண்பர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அர்னெய்ல் லே திருமணம் குறித்து கூறுகையில், "பிரான்ஸ் நாட்டில் உள்ள எனது தமிழ் நண்பர் மார்க் அமலன், தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்து அடிக்கடிக் கூறுவார். இந்திய நாட்டைப் பற்றியும் எங்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஆகையால், இந்தியாவிற்கு நாங்கள் சுற்றுலாவாக வந்தோம். காசியில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கெடுத்தோம். கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அவரது தோட்டத்தில்தான் தங்கியிருந்தோம். அப்போதே எங்களுக்கு தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருந்தது.
அதனை நண்பர் மார்க் அமலனின் பெற்றோரிடம் தெரிவித்தோம். அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தமிழர் முறைப்படி, நாங்கள் திருமண பந்தத்தில் இணைந்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |