பொலிசார் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சில் புதிதாக உருவாகியுள்ள சர்ச்சை
பிரான்சில் போக்குவரத்து பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கலவர பூமியானது.
கைது செய்யப்பட்ட பொலிசார்
கடந்த மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், Nahel M. என்ற 17 வயது இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது. அந்த இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
(AP)
மற்றுமொரு பொலிசார் கைது
அந்த கலவரங்களைத் தொடர்ந்து, Marseille நகரிலும் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தின்போது, Hedi (21) என்னும் இளைஞர், தன்னை பொலிசார் தாக்கியதாகவும், ரப்பர் குண்டு போன்ற ஒரு பொருளால் தான் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின்பும் தன் கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, அவரைத் தாக்கிய நான்கு பொலிசார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் சிறையிலடைக்கப்பட்டதற்கு பொலிஸ் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தன் கடமையைச் செய்யும்போது பெரிய தவறுகள் செய்தால் கூட, பொலிசாரை சிறையிலடைக்கக் கூடாது என தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் தேசிய பொலிஸ் துறைத் தலைவரான Frederic Veaux.
அவரது கருத்துக்கு மற்ற பொலிஸ் துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன்னால் பொலிசாரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது என்றும், ஆனாலும், யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். நீதித்துறையினரும் தேசிய பொலிஸ் துறைத் தலைவரான Frederic Veauxஇன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |